Sunday, November 27, 2011

தாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே..

இன்றும் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறது நவம்பர் கடைசி வாரம்; எப்படி இருந்தோம் இன்று ஒரு கோவில் மணி கூட அடிக்க முடியாத அளவுக்கு கெடுபிடிகள். 96 க்கு முதல் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் அவ்வளவாக ஞாபகம் இல்லாவிட்டாலும் தெருக்கூத்துகள், நெல்லியடி மாலுசந்தியில் இருக்கும் கலை பண்பாட்டு கழகத்தில் இருந்த ஒரு அண்ணாவுடன் சென்று அவர்களுடனே தங்கி ஒளிவீச்சு பார்த்தது , வீட்டுக்கு வந்த மாமாவின் நண்பரின் துப்பாக்கியை வாங்கி தோளில் போட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு சென்று  அம்மாவிடம் சென்று காட்டியது.   புலி மாமா புலி மாமா நான் வரட்டா போராட என பாடி திரிந்தது, திலீபன் நினைவு நாட்களில் கொட்டகை போட்டு படத்திற்கு விளக்கேற்றுவது , தெரிந்தோ தெரியாமலோ இப்படித்தான் எல்லாரும் செய்கிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என்று செய்த விடயங்கள். அப்பொழுது தெரிந்த விடயம் ஒன்றே ஒன்று தான் புலி ஹீரோ சிங்கம் வில்லன்

அதற்கு பிறகு மாவீரர் நாள் புலிகளின் குரல் கேட்பதுடன் முடிவடைந்து விடும் அதுவும் களவாக. மற்றபடி புலிகளின் குரல் கேட்பது தெரிந்தால் காதிற்குள் பேனை வைத்து அறைவார்கள். இதிலும் என் நிலைமை சற்று மோசம் எனது வீட்டில் சற்று சத்தமாகவே அப்பா வானொலி கேட்பார் எனக்கு கேட்பதில் விருப்பம் இருந்தாலும் காது பாவம் அல்லவா? எப்படியும் வருகிறவன் அப்பாவை ஒன்றும் செய்ய போவதில்லை நான்தான் எப்படியும் காதை கொடுக்க வேண்டும் இதனால் வீட்டில் சண்டை பிடித்து  ஒருவாறாக சத்தத்தை குறைத்து செய்திகள், செய்திவீச்சு, ஒன்பதே  கால் இற்கு ஒரு நிகழ்ச்சி வரும் பெயர்  மறந்துவிட்டேன் (தெரிந்தவர்கள் ஒருக்கா ஞாபகப்படுத்தவும்) என்பவற்றுடன் புலிகளின் குரலை மட்டுபடுத்தி கொண்டேன் . 
அதற்கு பின் சமாதான காலம் அதான்பா 2002-2006 சுதந்திரமாக எல்லா நிகழ்ச்சியும் செய்தோம். அப்பொழுதெல்லாம் நவம்பர் கடைசி வாரம் என்றால் ஊரே விழாக்கோலம் பூணும். வாசிகசாலை முதல் பாடசாலை வரை அனைத்து பொது இடங்களிலும் சிவப்பு ,மஞ்சள் கொடிகட்டி நிகழ்சிகள் செய்வார்கள். இப்படித்தான் ஒருக்கா மாவீரர் நாள் பாடசாலையில் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது கொடிகள், பதாகைகள் எல்லாவற்றையும் ஆர்மி அறுத்து எரிஞ்சு போய்ட்டான் என்று strikeபண்ணி அதிரவைத்தது வரலாறு. எமது பாடசாலை அதான் ஹாட்லி கல்லூரி செய்த strikes பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். அதே போல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஆர்மி தங்கள் பதாகையை உடைக்க கூடாது என்பதற்காகவே அனைத்து மாணவர்களும் இரவு முழுக்க அந்த பதாகையை சுற்றி படுத்திருந்தார்கள்.  சண்டை தொடங்கியபின் அவர்களில் பலர் காணாமற்போய் தலைகளில் driller துளைக்கப்பட்டு  வீதிகளில் சடலமாக மீட்கப்பட்டது ஊர் அறிந்த கதை
அப்பொழுது மாவீரர் நாள் என்றால் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தான். வடமராட்சியின் கூடுதலான பாடசாலைகளின்  பான்ட் வாத்தியங்களின் முழக்கத்தோடு விமரிசையாக நடக்கும். அதிலும் பாருங்கள் ராணுவம் இந்தக் காட்சி எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கும். பான்ட் வாத்திய குழு  அவங்க வீடியோ எடுக்கும் இடம் வரும் போது மட்டும் தொப்பியை சற்று முன்னால் இழுத்து விட்டு சற்று குனிந்து கொண்டு செல்ல வேண்டும்
என்னவோ தெரியாது துயிலும் இல்லத்தில் எதோ சக்தி இருக்கிறது இப்போ நினைக்கும் போது கூட உடல் ஒருமுறை vibrateஆகிறது.  மாவீரர்களின்  பெற்றோர் , உறவினர் நண்பர்கள், போராளிகள், பாடசாலை மாணவர்கள் என எள்ளங்குளம் நிரம்பியிருக்கும்,  மாணவர்கள் வந்திருப்போரிட்கு தங்கள் பிள்ளைகளின் கல்லறையை காட்ட உதவிக்கொண்டு இருப்பார்கள்.  ஒலிபெருக்கி உட்பட அனைவரின் ஆர்வமும் தலைவரின் உரையிலே . தலைவரின் உரைக்கு என்று ஒரு சக்தி உண்டு எதோ என்னுடன் கதைப்பது போலவே இருக்கும். அன்று ஒரு பெரும்பான்மை இனத்தவன் என்னிடம் கேட்ட பிறகுதான் எனக்கு தெரிந்தது நான் இன்னும் தலைவரை நேரே பார்த்தது இல்லை என்று. அது மட்டும் எனக்கு அவரை நேரே பார்த்தது இல்லையே என்ற எண்ணம் தோன்றியது இல்லை. உங்களில் பலருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் . அவரின் உரை முடிந்த பிறகு அனைவரின் முகத்தையும் ஒருமுறை பார்த்தால் அப்படி ஒரு பெருமையும் புளகாங்கிதமும் தெரியும் அவர் என்ன கதைத்திருந்தாலும்.  அதுதான் தலைவர்
 அதற்கு பிறகு தளபதிகள் விளக்கேற்றுவார்கள் பிறகு நாம்.  துயிலுமில்லம் முற்றாக உணர்ச்சிமயமான இடமாக மாறியிருக்கும் . அதை என்னால்  சரியாக விவரிக்க இயலவில்லை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால்  ஒன்று அவ்விடத்தை விட்டு அழாமல் உன்னால் வர முடியும் என்றால் very sorry மச்சான்

இன்று அந்த துயிலுமில்லம் இடிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக . ஆனால் அது தந்த உணர்வுகளும் நினைவுகளும். ?? எனக்கு எங்கள் ஊர் கவிஞர் .சு. முரளிதரன் எழுதிய நுங்கு விழிகள் என்ற கவிதை புத்தகத்தில் இருந்து ஒரு ஹைக்கூ தான் ஞாபகம் வருகிறது

உழுது மகிழ்ந்தது இராணுவம்
துயிலுமில்ல வாசகம் 
இவர்கள் விதைக்கப்பட்டவர்கள்.

 எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் நாளை அசை போட்டுக்கொண்டே கொழும்பில் எனது இன்றைய மாலை கழிகிறது..
இப்பொழுதும் "தாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே" என்ற பாடல் காதில் ஒலித்தபடி... 

No comments:

Post a Comment