Sunday, November 27, 2011

நினைவுகூரல்கள்

வணக்கம் இன்று நான் முக்கியமான பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்ன வேணாமா? அதெல்லாம் ஏலாது நான் சொல்லியே தீருவேன்......


நான் கடந்தவாரம் இரண்டு படங்கள் திரும்பவும் ஒருமுறை பார்க்க நேரிட்டது. முதலாவது ஒரு அருமையான ஆங்கில திரைப்படம். ஒரு காமிக்ஸ் தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஸ்பாட்டா நகரத்தின் வீரத்தை  சொல்லும் ஒரு வரலாற்றுக்கதை .  Zack Snyder இயக்கியிருப்பார் . ஒரு முந்நூறு பேர் கொண்ட சிறிய படை நாற்பதாயிரம் கொண்ட பெரிய ஒரு படையை எவ்வாறு எதிர்கிறார்கள் என்பதை கிராபிக்ஸ் அட்டகாசத்துடன் காட்டி இருப்பார்கள் . அந்த படம் பார்க்கும் எம்மில் யாருக்கும் எமது கதை கண்முன் நிழலாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவை இல்லை . 
தமிழில் மொழி மாற்றப்பட்ட படத்தையே நான் இம்முறை பார்க்க நேரிட்டது. அற்புதமான மொழிபெயர்ப்பு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்படத்தை ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் ஒருமுறை தமிழில் பாருங்கள் வசனங்கள் கச்சிதம் . அதுவும் இறுதிக்கட்டத்தில் 

"எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எதற்காக நாங்கள் உயிரை கொடுத்தோம் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் . அவர் உங்களிடம் எதிர்பார்த்தது புகழை அல்ல வருங்கால சந்ததியினர் தன்னை போற்றி பாடவேண்டும் என்பதல்லஅவர் உங்களிடம் எதிர்பார்த்தது எங்களை மறந்துவிடாதீர்கள் நினைவில் வையுங்கள்அவர் தன் தாய் நாட்டுக்காக சிந்திய இரத்தத்தையும் செய்த தியாகத்தையும் யாரும் மறந்துவிடாதீர்கள் இனிவரும் சந்ததிகள் இவருடைய சரித்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்இப்பகுதியை கடந்து செல்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் இவரை போன்ற வீரனாக வர வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். அன்று ஓர் லேனடைஸ் இறந்து போனாலும் அவரது வழியிலே ஆயிரம் லேனடைஸ் உருவாகவேண்டும் இதுதான் அவரது ஆசை.."
என்று கூறிவிட்டு வெற்றி நமதே என்று கூச்சலிட்டுக்கொண்டு போரிற்கு கிளம்பும் காட்சி அப்படியே புல்லரித்துவிட்டது போங்கள்.
வாழ்க்கையில் பாதியை இழந்து போகாமல் அந்த படத்தை கட்டாயம் பாருங்கள். 


அடுத்த படம் கடந்த ஞாயிறு கே டிவில மணியின் கன்னத்தில் முத்தமிட்டால் போட்டார்கள். சுஜாதாவின் வசனம் நறுக் அதுவும் ராவணன் படம் பார்த்தபின் பார்ப்பதாலோ என்னவோ சுஜாதாவின் சக்தி தெரிகிறது பெரும்பாலான இடங்களில் இது சுஜாதாவால்  மட்டும் தான் முடியும்  என்று நிரூபிக்கிறார். ரகுமானின் இசை வழக்கம் போலவே அசத்தல்  இசையால் கதை சொல்கிறார். மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகள் , மணியின் இயக்கம் , மாதவன் , சிம்ரன், கீர்த்தனா என நிறைய பிடிக்கிறது ஒன்றை தவிர. அதென்னப்பா உங்களுக்கு இலங்கை தமிழன் எண்டா அவ்வளவு இளக்காரமா போச்சா (எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் எண்டு நினைசிட்டான்களோ தெரியேல்லை) மணி சார் உங்ககிட்ட ஒரு கேள்வி ? இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு தமிழ் இயக்குனரான நீங்கள் எங்களை பற்றி படம் எடுக்கிறது எண்டால் என்ன செய்திருக்கோணும் என்ன செல்லம் செய்திருக்கோணும் ? ஒண்டு சரியாய் வரலாறு தெரிஞ்சு எடுத்திருக்கோணும், இல்லாட்டி அசாமோ , ஒரிசாவோ அப்படி ஒரு இடத்தை பற்றி எடுத்திருக்கோணும்.பாவம் சார் நாங்க மாங்குளம் காட்டினீங்க பாருங்க அப்பிடியே அசந்து போய்ட்டேன். பிரகாஷ்ராஜ் - மாதவன்  உரையாடல் மனதை ரொம்ப நெருடியது .இந்த லட்சணத்தில நம்மாளுகளே நம்ம கதையை எடுத்திட்டாண்டா என்று தலையில் வைத்து கொண்டாடிய வரலாறுகளும் உண்டு.  அப்படத்தில் பிடித்த இன்னுமொரு விடயம் 
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன
எங்கள் பற்களும் சுண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகுத் தோல் பிய்ந்திருந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிழ்ந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய விரல்கள் ஒருநாள் துடிதுடிக்கும்
சுண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக !
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !

அப்புறம் மணி சார் புது படம் எடுக்கிறீங்கள் எண்டு கேள்விப்பட்டன் வசனம் சுஹாசினியா பாஸ்? முதல்லயே சொல்லுங்க நாங்க alert  ஆகிறதுக்கு ..


No comments:

Post a Comment