Sunday, November 27, 2011

தாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே..

இன்றும் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறது நவம்பர் கடைசி வாரம்; எப்படி இருந்தோம் இன்று ஒரு கோவில் மணி கூட அடிக்க முடியாத அளவுக்கு கெடுபிடிகள். 96 க்கு முதல் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் அவ்வளவாக ஞாபகம் இல்லாவிட்டாலும் தெருக்கூத்துகள், நெல்லியடி மாலுசந்தியில் இருக்கும் கலை பண்பாட்டு கழகத்தில் இருந்த ஒரு அண்ணாவுடன் சென்று அவர்களுடனே தங்கி ஒளிவீச்சு பார்த்தது , வீட்டுக்கு வந்த மாமாவின் நண்பரின் துப்பாக்கியை வாங்கி தோளில் போட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு சென்று  அம்மாவிடம் சென்று காட்டியது.   புலி மாமா புலி மாமா நான் வரட்டா போராட என பாடி திரிந்தது, திலீபன் நினைவு நாட்களில் கொட்டகை போட்டு படத்திற்கு விளக்கேற்றுவது , தெரிந்தோ தெரியாமலோ இப்படித்தான் எல்லாரும் செய்கிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என்று செய்த விடயங்கள். அப்பொழுது தெரிந்த விடயம் ஒன்றே ஒன்று தான் புலி ஹீரோ சிங்கம் வில்லன்

அதற்கு பிறகு மாவீரர் நாள் புலிகளின் குரல் கேட்பதுடன் முடிவடைந்து விடும் அதுவும் களவாக. மற்றபடி புலிகளின் குரல் கேட்பது தெரிந்தால் காதிற்குள் பேனை வைத்து அறைவார்கள். இதிலும் என் நிலைமை சற்று மோசம் எனது வீட்டில் சற்று சத்தமாகவே அப்பா வானொலி கேட்பார் எனக்கு கேட்பதில் விருப்பம் இருந்தாலும் காது பாவம் அல்லவா? எப்படியும் வருகிறவன் அப்பாவை ஒன்றும் செய்ய போவதில்லை நான்தான் எப்படியும் காதை கொடுக்க வேண்டும் இதனால் வீட்டில் சண்டை பிடித்து  ஒருவாறாக சத்தத்தை குறைத்து செய்திகள், செய்திவீச்சு, ஒன்பதே  கால் இற்கு ஒரு நிகழ்ச்சி வரும் பெயர்  மறந்துவிட்டேன் (தெரிந்தவர்கள் ஒருக்கா ஞாபகப்படுத்தவும்) என்பவற்றுடன் புலிகளின் குரலை மட்டுபடுத்தி கொண்டேன் . 
அதற்கு பின் சமாதான காலம் அதான்பா 2002-2006 சுதந்திரமாக எல்லா நிகழ்ச்சியும் செய்தோம். அப்பொழுதெல்லாம் நவம்பர் கடைசி வாரம் என்றால் ஊரே விழாக்கோலம் பூணும். வாசிகசாலை முதல் பாடசாலை வரை அனைத்து பொது இடங்களிலும் சிவப்பு ,மஞ்சள் கொடிகட்டி நிகழ்சிகள் செய்வார்கள். இப்படித்தான் ஒருக்கா மாவீரர் நாள் பாடசாலையில் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது கொடிகள், பதாகைகள் எல்லாவற்றையும் ஆர்மி அறுத்து எரிஞ்சு போய்ட்டான் என்று strikeபண்ணி அதிரவைத்தது வரலாறு. எமது பாடசாலை அதான் ஹாட்லி கல்லூரி செய்த strikes பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். அதே போல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஆர்மி தங்கள் பதாகையை உடைக்க கூடாது என்பதற்காகவே அனைத்து மாணவர்களும் இரவு முழுக்க அந்த பதாகையை சுற்றி படுத்திருந்தார்கள்.  சண்டை தொடங்கியபின் அவர்களில் பலர் காணாமற்போய் தலைகளில் driller துளைக்கப்பட்டு  வீதிகளில் சடலமாக மீட்கப்பட்டது ஊர் அறிந்த கதை
அப்பொழுது மாவீரர் நாள் என்றால் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தான். வடமராட்சியின் கூடுதலான பாடசாலைகளின்  பான்ட் வாத்தியங்களின் முழக்கத்தோடு விமரிசையாக நடக்கும். அதிலும் பாருங்கள் ராணுவம் இந்தக் காட்சி எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கும். பான்ட் வாத்திய குழு  அவங்க வீடியோ எடுக்கும் இடம் வரும் போது மட்டும் தொப்பியை சற்று முன்னால் இழுத்து விட்டு சற்று குனிந்து கொண்டு செல்ல வேண்டும்
என்னவோ தெரியாது துயிலும் இல்லத்தில் எதோ சக்தி இருக்கிறது இப்போ நினைக்கும் போது கூட உடல் ஒருமுறை vibrateஆகிறது.  மாவீரர்களின்  பெற்றோர் , உறவினர் நண்பர்கள், போராளிகள், பாடசாலை மாணவர்கள் என எள்ளங்குளம் நிரம்பியிருக்கும்,  மாணவர்கள் வந்திருப்போரிட்கு தங்கள் பிள்ளைகளின் கல்லறையை காட்ட உதவிக்கொண்டு இருப்பார்கள்.  ஒலிபெருக்கி உட்பட அனைவரின் ஆர்வமும் தலைவரின் உரையிலே . தலைவரின் உரைக்கு என்று ஒரு சக்தி உண்டு எதோ என்னுடன் கதைப்பது போலவே இருக்கும். அன்று ஒரு பெரும்பான்மை இனத்தவன் என்னிடம் கேட்ட பிறகுதான் எனக்கு தெரிந்தது நான் இன்னும் தலைவரை நேரே பார்த்தது இல்லை என்று. அது மட்டும் எனக்கு அவரை நேரே பார்த்தது இல்லையே என்ற எண்ணம் தோன்றியது இல்லை. உங்களில் பலருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் . அவரின் உரை முடிந்த பிறகு அனைவரின் முகத்தையும் ஒருமுறை பார்த்தால் அப்படி ஒரு பெருமையும் புளகாங்கிதமும் தெரியும் அவர் என்ன கதைத்திருந்தாலும்.  அதுதான் தலைவர்
 அதற்கு பிறகு தளபதிகள் விளக்கேற்றுவார்கள் பிறகு நாம்.  துயிலுமில்லம் முற்றாக உணர்ச்சிமயமான இடமாக மாறியிருக்கும் . அதை என்னால்  சரியாக விவரிக்க இயலவில்லை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால்  ஒன்று அவ்விடத்தை விட்டு அழாமல் உன்னால் வர முடியும் என்றால் very sorry மச்சான்

இன்று அந்த துயிலுமில்லம் இடிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக . ஆனால் அது தந்த உணர்வுகளும் நினைவுகளும். ?? எனக்கு எங்கள் ஊர் கவிஞர் .சு. முரளிதரன் எழுதிய நுங்கு விழிகள் என்ற கவிதை புத்தகத்தில் இருந்து ஒரு ஹைக்கூ தான் ஞாபகம் வருகிறது

உழுது மகிழ்ந்தது இராணுவம்
துயிலுமில்ல வாசகம் 
இவர்கள் விதைக்கப்பட்டவர்கள்.

 எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் நாளை அசை போட்டுக்கொண்டே கொழும்பில் எனது இன்றைய மாலை கழிகிறது..
இப்பொழுதும் "தாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே" என்ற பாடல் காதில் ஒலித்தபடி... 

நினைவுகூரல்கள்

வணக்கம் இன்று நான் முக்கியமான பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்ன வேணாமா? அதெல்லாம் ஏலாது நான் சொல்லியே தீருவேன்......


நான் கடந்தவாரம் இரண்டு படங்கள் திரும்பவும் ஒருமுறை பார்க்க நேரிட்டது. முதலாவது ஒரு அருமையான ஆங்கில திரைப்படம். ஒரு காமிக்ஸ் தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஸ்பாட்டா நகரத்தின் வீரத்தை  சொல்லும் ஒரு வரலாற்றுக்கதை .  Zack Snyder இயக்கியிருப்பார் . ஒரு முந்நூறு பேர் கொண்ட சிறிய படை நாற்பதாயிரம் கொண்ட பெரிய ஒரு படையை எவ்வாறு எதிர்கிறார்கள் என்பதை கிராபிக்ஸ் அட்டகாசத்துடன் காட்டி இருப்பார்கள் . அந்த படம் பார்க்கும் எம்மில் யாருக்கும் எமது கதை கண்முன் நிழலாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவை இல்லை . 
தமிழில் மொழி மாற்றப்பட்ட படத்தையே நான் இம்முறை பார்க்க நேரிட்டது. அற்புதமான மொழிபெயர்ப்பு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்படத்தை ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் ஒருமுறை தமிழில் பாருங்கள் வசனங்கள் கச்சிதம் . அதுவும் இறுதிக்கட்டத்தில் 

"எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எதற்காக நாங்கள் உயிரை கொடுத்தோம் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் . அவர் உங்களிடம் எதிர்பார்த்தது புகழை அல்ல வருங்கால சந்ததியினர் தன்னை போற்றி பாடவேண்டும் என்பதல்லஅவர் உங்களிடம் எதிர்பார்த்தது எங்களை மறந்துவிடாதீர்கள் நினைவில் வையுங்கள்அவர் தன் தாய் நாட்டுக்காக சிந்திய இரத்தத்தையும் செய்த தியாகத்தையும் யாரும் மறந்துவிடாதீர்கள் இனிவரும் சந்ததிகள் இவருடைய சரித்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்இப்பகுதியை கடந்து செல்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் இவரை போன்ற வீரனாக வர வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். அன்று ஓர் லேனடைஸ் இறந்து போனாலும் அவரது வழியிலே ஆயிரம் லேனடைஸ் உருவாகவேண்டும் இதுதான் அவரது ஆசை.."
என்று கூறிவிட்டு வெற்றி நமதே என்று கூச்சலிட்டுக்கொண்டு போரிற்கு கிளம்பும் காட்சி அப்படியே புல்லரித்துவிட்டது போங்கள்.
வாழ்க்கையில் பாதியை இழந்து போகாமல் அந்த படத்தை கட்டாயம் பாருங்கள். 


அடுத்த படம் கடந்த ஞாயிறு கே டிவில மணியின் கன்னத்தில் முத்தமிட்டால் போட்டார்கள். சுஜாதாவின் வசனம் நறுக் அதுவும் ராவணன் படம் பார்த்தபின் பார்ப்பதாலோ என்னவோ சுஜாதாவின் சக்தி தெரிகிறது பெரும்பாலான இடங்களில் இது சுஜாதாவால்  மட்டும் தான் முடியும்  என்று நிரூபிக்கிறார். ரகுமானின் இசை வழக்கம் போலவே அசத்தல்  இசையால் கதை சொல்கிறார். மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகள் , மணியின் இயக்கம் , மாதவன் , சிம்ரன், கீர்த்தனா என நிறைய பிடிக்கிறது ஒன்றை தவிர. அதென்னப்பா உங்களுக்கு இலங்கை தமிழன் எண்டா அவ்வளவு இளக்காரமா போச்சா (எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் எண்டு நினைசிட்டான்களோ தெரியேல்லை) மணி சார் உங்ககிட்ட ஒரு கேள்வி ? இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு தமிழ் இயக்குனரான நீங்கள் எங்களை பற்றி படம் எடுக்கிறது எண்டால் என்ன செய்திருக்கோணும் என்ன செல்லம் செய்திருக்கோணும் ? ஒண்டு சரியாய் வரலாறு தெரிஞ்சு எடுத்திருக்கோணும், இல்லாட்டி அசாமோ , ஒரிசாவோ அப்படி ஒரு இடத்தை பற்றி எடுத்திருக்கோணும்.பாவம் சார் நாங்க மாங்குளம் காட்டினீங்க பாருங்க அப்பிடியே அசந்து போய்ட்டேன். பிரகாஷ்ராஜ் - மாதவன்  உரையாடல் மனதை ரொம்ப நெருடியது .இந்த லட்சணத்தில நம்மாளுகளே நம்ம கதையை எடுத்திட்டாண்டா என்று தலையில் வைத்து கொண்டாடிய வரலாறுகளும் உண்டு.  அப்படத்தில் பிடித்த இன்னுமொரு விடயம் 
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன
எங்கள் பற்களும் சுண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகுத் தோல் பிய்ந்திருந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிழ்ந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய விரல்கள் ஒருநாள் துடிதுடிக்கும்
சுண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக !
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !

அப்புறம் மணி சார் புது படம் எடுக்கிறீங்கள் எண்டு கேள்விப்பட்டன் வசனம் சுஹாசினியா பாஸ்? முதல்லயே சொல்லுங்க நாங்க alert  ஆகிறதுக்கு ..


Thursday, November 24, 2011

லாரா -Part2

மச்சான் அவன் லாராதான் அப்பிடியே shot எல்லாம் எடுக்கிறான்..... பாரடா இவன் லாரா மாதிரியே வருவான். இது இப்போது நிறைய கிரிக்கட் ரசிகர்கள்  உச்சரிக்கும் வசனம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது . வாழ்த்துக்கள் பிராவோ .


Pull shot,  ஆகட்டும் , Cover-Drive ஆகட்டும், Inside-Out, Over the midoff lofted shot ஆகட்டும் அப்படியே லாராவை பார்ப்பது போலவே இருக்கிறது அதுவும் விசேடமாக ஹெல்மெட் அணிந்து ஆடும் போது . எல்லாவற்றையும் விட சதம் அடித்து விட்டு ஒருகையில் ஹெல்மெட் உடனும் மற்றக்கையால் பேட்ஐ உயர்த்தி காட்டும் போது சிறிய வயது லாராவேதான். கூடுதல் தகவல் பிராவோ லாராவின் மச்சானாம். (யாராவது DNA ஐ உசுப்பி இருப்பாங்களோ?). பந்துக்கு வலிக்காமல் ஆடுவது மேற்கிந்திய தீவுகள் வரலாற்றிலேயே இல்லை அந்த அடித்தாடும் ஸ்டைல் லாராவுக்கு அழகாக இருக்கும் பிராவோவுக்கும் அப்படியே. அதுவும் பாருங்கள் இன்று பிராவோ ஆடிக்கொண்டு இருக்கும் போது புள்ளிவிபரம் ஒன்று காட்டினார்கள் ஓட்டங்கள், சராசரி எல்லாம் அப்படியே பொருந்துகிறது. லாரா தனது 13thடெஸ்ட் இல் 167 ஓட்டங்கள் எடுத்திருந்தார் இன்று பிராவோ 166 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குருவை மிஞ்ச வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ.



எது என்னவோ லாரா ரசிகர்கள் எல்லாம் லாராவே திரும்பி வந்தது போல் கொண்டாடுகிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு இப்பொழுது பிராவோவிடம் இவ்வளவு சிறிய வயதில் அவ்வளவு பெரிய ஜாம்பவானின் பட்டத்தை சுமப்பது என்பது குருவி தலையில் பனங்காய்தான் என்றாலும் சுமப்பார் என்றே தோன்றுகிறது. பார்ப்போம் .

அப்புறம் என்னுடைய batting ஐ பார்த்துவிட்டு பொண்டிங் போல இருக்கு என்று....................................... சரி விடு விடு .... ஒரு சிங்கத்தை பற்றி சிங்கமே சொல்லப்படாது .. நாளைக்கு யாராவது பதிவர்கள் என்னை பற்றி எழுதும்போது தெரிஞ்சு கொள்ளுங்கப்பா........ அப்ப வரட்டே...

Sunday, November 20, 2011

வரலாறு ரொம்ப முக்கியம் தம்பி

கடந்த விடுமுறையின் போது ஊருக்கு போயிருந்தேன், வந்தவுடனேயே மச்சான் மைக்கல் கிரௌண்ட்ல மேட்ச் ஒன்று  இருக்கடா எண்டு கூட்டு ஒன்று  கேட்க மறு கேள்வி இல்லாமல் பைக்ல ஏறினேன்... நெல்லியடி வதிரி ரோட்டால போகும் போது ஏதோ வித்தியாசமான மாற்றம் .. என்ன என்று கொஞ்ச நேரம் தெரியவில்லை பிறகுதான் நினைவுக்கு வந்தது இதில எல்லோ மில்லர் இடிச்ச கட்டிடம் இருந்ததெல்லோ எண்டு...


நெல்லியடி சென்றல் எண்டு எல்லோராலும் அழைக்கப்படும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் முன்றலில் இருந்த சிதைந்த கட்டிடம் முற்றாக இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டிருந்தது. ஏதோ மனசை பிசைய என்ன மச்சி கட்டிடம் இடிசிட்டங்களா? ஒரு நியூஸ் உம் வரலேயேடா என்று கேட்க.. ஓமடா திடீரென்று இடிச்சுபோட்டான்கள் அப்பிடியே தெரிஞ்சும் என்ன செய்யிறது என்றான் ..  ஏண்டா ஒருத்தரும் எதிர்க்கேல்லையே நாங்க ஹாட்லில படிக்கேக்க எவ்வளவு Strike பண்ணினோம் ஒருக்கா மாவீரர் நாள் கொடியை அறுத்து போட்டாங்கள் ஆர்மி எண்டு சொல்லி அவங்கட காம்ப்க்கு  முன்னாலேயே நின்று Strike பண்ணினமேடா என்றேன்.அவன் அதுக்கு  ஏண்டா மிச்சமா இருக்கிறவங்களும் உயிரோட இருக்கிறது விருப்பமில்லையா என்றான்.... 

எனக்கும்  என் இயலாமை புரிந்தும் ஏற்கமுடியவில்லை. எமது பிரதேசத்தின்  வரலாறு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண   நூலகத்திலிருந்து மில்லர் கட்டடம் வரை ஒன்றும் மிச்சமில்லை .... இப்பவே கொழும்பில் வசிக்கும் எனது சித்தியின் மகள் பிரபாகரன் என்றால் யார் என்று கேட்கிறாள்? அவளுக்கே என்னால் சரியாய்  புரியவைக்க முடியவில்லை இந்த நிலைமையில் என் பிள்ளைக்கு எதை காட்டி புரிய வைப்பது?
அந்த கட்டிடம் இருந்தாலாவது அடுத்த சந்ததி ஏன் இந்த கட்டிடம் இடிந்து போய் உள்ளது அதை ஏன் இன்றும் அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது விளக்க "நாம் இப்படிதான் போரிட்டோம்" , "மண்ணின் பெருமை" என்றெலாம் அடித்து விடலாம் என எண்ணி இருந்தேன் . வன்னியில் 2 லட்சம் பேர் சாகும்போது வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்த 30 லட்சம் பேரில் நீயும் ஒருவன்தானே என்று கேட்பது எனக்கு கேட்கிறது.... அதெல்லாம் சொல்லும் போது வரலாற்றை லைட் ஆ மாத்தலாம் பாஸ்...(ஓ இததான் வரலாற்றுப்பிழை எண்டு சொல்லுவாங்களோ..). 

ஒருவாறாக கிரௌன்ட்டுக்கு போய்ட்டோம். எனக்கு இருப்பு கொள்ளவில்லை என் நல்ல காலமோ அவரின் கெட்ட காலமோ அந்த பாடசாலையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் அப் பாடசாலையின் தீவிர விசுவாசி அவரிடம் கேட்டேன் என்ன நடந்தது என்று .
அவர்கள் புதிதாக கட்டட திறப்பு விழா ஒன்று நடத்தியிருக்கிறார்கள் அதற்கு பிரதம விருந்தினர் கவர்னர் அவர்கள் . அவர் விழாவிற்கு வரும் போது அக் கட்டிடம் அவரை கொஞ்சம் உறுத்தியிருகிறதாக்கும் ஆதலால் அவர் இந்த அழகான பாடசாலையில் அசிங்கமாக ஒரு இடிந்த கட்டடம் உங்களுக்காக நான் இந்த கட்டடத்துக்கு  பதிலாக புதிய கட்டடம் ஒன்றை அமைத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் இதனால் மகிழ்வுற்ற 
பாடசாலை சமூகம் கரவொலி செய்து அவரை வழி அனுப்பி வைத்தது. அவர் போய் இரண்டு நாட்களில் கட்டடம் இடிக்க பட்டுவிட்டதாம்.  பெரும்பான்மை இனத்துக்கு இருக்கிற உணர்வு நமக்கு  இல்லையோ.. அல்லது எவ்வளவோ போய்ட்டுது இனி என்ன போய் என்ன என்று விட்டிட்டமோ தெரியேல்லை...

சரி நமக்கு அதை பற்றி என்ன விசயத்துக்கு வாறன் மேட்ச் தொடங்க  போகுது....   
இறங்கிறோம், கலக்கிறோம், ஜெயிக்கிறோம்.